ஸ்ரீவித்யா ராஜனுடன் கார்கில் போரின்போது ஒன்றாக விமானத்தில் பறந்து பணியாற்றவில்லை என்று பெண் விமானி குஞ்சன் சக்சேனா தெரிவித்துள்ளார்.
1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்ற இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், குஞ்சன் சக்சேனா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இந்திய விமானப் படையினரை தவறாக சித்தரித்துள்ளது என்றும், அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு இந்திய விமானப் படை கடிதம் எழுதியது. இந்தப் படம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு வகைகளில் சர்ச்சை நீடித்து வந்தது.
இந்நிலையில் நிஜ குஞ்சன் சக்சேனாவின் சக விமானி ஸ்ரீவித்யா ராஜன் கருத்து தெரிவித்திருந்தார். அதில் "கார்கில் போரில் பெண் விமானியாக குஞ்சன் சக்சேனா ஒருவர் மட்டுமே இல்லை. இதுவே மிகப்பெரிய தவறு. நானும் குஞ்சனும் ஒன்றாகத்தான் உதம்பூர் விமானப் படைப்பிரிவுக்கு கார்கில் போரின்போது அனுப்பப்பட்டோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் குஞ்சனுக்கு முன்பாக காஷ்மீர் பகுதிக்கு ஆண் விமானிகளுடன் முதல்முறை சென்றது நான்தான். குஞ்சன் பின்புதான் எங்களுடன் இணைந்தார்" என கூறியிருந்தார்.
இப்போது இந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார் குஞ்சன் சக்சேனா "முதல் முறையாக கார்கிலுக்கு சென்றபோது, எவ்விதமான சாதனையையும் படைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறன்பட செய்து முடிப்பதில் மட்டும் என் கவனம் இருந்தது. 1999 முதல் இந்தப் படம் வெளியாகும் வரை எந்தச் சர்ச்சையும் ஏற்பட்டதில்லை. என் பெயரை வைத்து வெளியான தலைப்புச் செய்திகளை மட்டும் நான் இதுவரை பார்த்து வந்துள்ளேன்"
மேலும் தொடர்ந்த அவர் "எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கார்கில் வந்த ஸ்ரீவித்யா ராஜனை பற்றி நான் கூற ஒன்றுமில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக பறந்ததுமில்லை பணியாற்றியதும் இல்லை" என தெரிவித்துள்ளார்.