ரைடை கேன்சல் செய்ய ஆன்லைன் டாக்சி ஓட்டுநர் கூறிய நேர்மையான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தேவை மற்றும் விரைவான பயணம் ஆகியவற்றுக்காக ஆன்லைன் செயலிகள் மூலம் வாடகை கார்கள் மற்றும் ஆடோக்களை புக் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புக் செய்த இடத்திற்கு, புக் செய்த நேரத்திற்குள் வாகனங்கள் வருவதை பார்த்துக்கொள்ளும் வகையில் மேப்பில் வாகனத்தின் லொகேஷனை பார்க்கும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
அதேசமயம், புக் செய்த பிறகு ட்ரைவர், போன்கால்கள் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் போவதும், காத்திருக்க வைத்து பிறகு ரைடை கேன்சல் செய்வதும் வாடிக்கையாளரை எரிச்சலூட்டுவதும் சரிசமமாக நடப்பதுண்டு. புக் செய்த ரைடை கேன்சல் செய்வதற்கு சில ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை டிரைவர்கள் முன்வைப்பர். ஆனால் ஒரு ஓட்டுநர் ரைடை கேன்சல் செய்வதற்கு புக் செய்த நபரிடம் கூறிய நேர்மையான காரணம் பலரின் மனதையும் வென்றுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஆஷி என்ற ட்விட்டர் பயனர் ஊபரில் புக் செய்துள்ளார். பரத் என்ற ஓட்டுநர் ரைடை ஏற்றுக்கொண்டார். சிறிது நேரம் ஆகியும் ஓட்டுநர் வரவில்லை. ஆனால் அவர் சாட் பாக்சில் தனக்கு தூக்க கலக்கமாக உள்ளது எனவும், ரைடை கேன்சல் செய்யுமாறும் கேட்டுள்ளார். ஆஷியும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஓகே என பதிலளித்துள்ளார். இதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஆஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை 2.9 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
மேலும் பலரும் ஓட்டுநர் பரத்திற்கு ஆதரவாக கமெண்ட் செய்துவருகின்றனர். அவருடைய நேர்மை பிடித்திருப்பதாக பாராட்டி வருகின்றனர். சிலர் ஆன்லைன் டாக்சி புக்கிங்கில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பயனர், தான் யூடியூபில் வீடியோ பார்ப்பதால் வர இயலாது என ஒரு ஓட்டுநர் கூறியதாக பகிர்ந்துள்ளார். சிலர், புக் செய்து 5 நிமிடங்களாகியும் இடத்தைவிட்டு அசையாமல் இருந்த ஓட்டுநர்கள் பற்றியும் பகிர்ந்துள்ளனர்.