நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கடைசி நேர அறிவிப்பால் தொலைதூர மையங்களுக்கு தேர்வெழுத சென்ற தேர்வர்கள் அவதியடைந்துள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே நடந்து முடிந்த நெட் தேர்வையும் மத்திய அரசு ரத்து செய்தது. தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாக கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு வாரியத்தின் நடைமுறைகள் குறித்து முழுமையான ஆய்வு மதிப்பீடு செய்யப்படும் என்றும், இதற்காக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துவதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்வின் நேர்மையை உறுதி செய்யும் விதமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.