நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது
மும்பையைச் சேர்ந்த இரு மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட 'வினா தாள் போன்றவற்றில் பல குளறுபடிகள் இருந்ததால், நீட் தேர்வை முறையாக எழுத முடியவில்லை, எனவே தங்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும், அதுவரை இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த மேம்படுத்த உயர் நீதிமன்றம், இரண்டு மாணவர்களுக்கு இளநிலை மருத்துவபடிப்புக்கான நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும், இரு மாணவர்களுக்கும் விரைந்து நீட் மறுதேர்வை நடத்த வேண்டும் எனவும் தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வுகள் முகமை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள்....
16லட்சம் மாணவர்கள் ஒரு தேர்வை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு பேருக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. எனவே, எம்.பி.பி.எஸ் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.
அதேவேளையில், பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்த இரு மாணவர்களின் புகார்கள் குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.