ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையும் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்த போதே மாணவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா என்ற பகுதி நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு 40க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி மையங்கள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கோட்டா பகுதிக்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். கோட்டா வரும் மாணவர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பயிற்சி பெறுவார்கள்.
இந்நிலையில், கோட்டா பகுதியில் தங்கிப் பயின்று வந்த கரண் என்ற 18 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹிந்துஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்மெர் தான் கரணின் சொந்த ஊர். இது கோட்டாவில் இருந்து 670 கி.மீ தொலைவில் உள்ளது. இந்நிலையில், கரண் நேற்று காலை தனது தந்தைக்கு போன் செய்து வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் தனது அறையில் உள்ள சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கரணின் தந்தை உடனடியாக அவர் தங்கி இருக்கும் அறையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உரிமையாளர் விரைந்து கரணின் அறைக்கு சென்றுள்ளார். அறையின் கதவை உடைத்து கரணை கீழை இறக்கியுள்ளார். உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கரணை உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். கரணின் அறையை ஆய்வு செய்த போலீசார் தற்கொலை கடிதம் எதுவும் இல்லை என்று கூறினர்.
நீட் விவகாரத்தில் இந்த ஆண்டு 8 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 7 மாணவர்களும், 2016ம் ஆண்டில் 16 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு பிரதீபா, சுபஸ்ரீ என்ற இரண்டு மாணவிகள் நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.