இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் #MeToo பிரசாரம் மூலமாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இவர்கள் டெல்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட போது, பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பதவி விலகுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வீராங்னைகள் கூறிய பாலியல் தொல்லை புகாா் குறித்து விசாரணை செய்ய கடந்த ஜனவரி மாதம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துவிட்டது. ஆனால் இதுவரை அறிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்களை தாண்டி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது, ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வீரர், வீராங்கனைகள் நியாயத்துக்காக வீதியில் இறங்கிப் போராடுவது என்னைக் காயப்படுத்துகிறது. நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இனி இம்மாதிரி சம்பவம் நடக்கவே கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்/வீராங்கனைகளுக்கு ஆதரவளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "விளையாட்டு வீரர்களாக சர்வதேச அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு இருக்கையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் துன்புறுத்தலுக்கு எதிராக வீரர்கள் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. வீரர்களின் பிரச்னைகள் கவனமாக கேட்கப்பட்டு அவை நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த பிரச்னை தீர்க்கப்படுவதன் மூலம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அனைத்து வீரர்களும் பாதுகாப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.