மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியில் 90 சதவிகிதம் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு நிர்பயா என்ற பெண், ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனைத்தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பில் மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதன்பேரில் 2013ஆம் ஆண்டு பெண்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்த ‘நிர்பயா நிதி’என்று தனி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்கிறது. மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியில் 90 சதவிகித நிதியை மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை மாநிலங்களுக்கு பகிரப்பட்ட 2,264 கோடி ரூபாயில் 89 சதவிகித நிதியை மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
அத்துடன் ஒரு மாநிலம் கூட ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பயன்படுத்தவில்லை என்ற அதிர்ச்சியான தகவலும் இந்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதிகப்பட்சமாக உத்தராகண்ட் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 50 சதவிகித நிதியை பயன்படுத்தியுள்ளன. இதற்கு அடுத்து சத்தீஸ்கர்(43%), நாகலாந்து(39%), ஹரியானா(32%) பயன்படுத்தியுள்ளன. மேலும் டெல்லியில் இந்த நிதியில் 5 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நிர்பயா நிதிக்கு மத்திய அரசு மொத்தமாக 3600 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.