டெல்லியில் வன்முறை : இரண்டு செய்தியாளர்கள் மீது தாக்குதல்

டெல்லியில் வன்முறை : இரண்டு செய்தியாளர்கள் மீது தாக்குதல்
டெல்லியில் வன்முறை : இரண்டு செய்தியாளர்கள் மீது தாக்குதல்
Published on

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் காவலர். மற்ற 6 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரஹம்புரி மற்றும் மஜ்பூர் ஆகிய இடங்களில் இருபிரிவினர், ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து வடகிழக்கு டெல்லியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் சூழல் குறித்தும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில், உள்துறை அமைச்சக உயரதிகாரிகளும், டெல்லி காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இதேபோல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உயரதிகாரிகள் மற்றும் வன்முறை நடைபெற்ற இடங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், மூன்றாவது முறையாகச் சற்று நேரத்திற்கு முன்பு டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் இருதரப்புக்கு இடையே பயங்கர மோதல் நிலவியது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற என்.டி.டிவியின் செய்தியாளர்கள் அரவிந்த் குணசேகர் மற்றும் சவுராப் சுக்லா ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com