கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களைக் கைப்பற்றக் கூடிய சூழல் நிலவுகிறது. இதன்மூலம், அங்கு தனது என்ணிக்கையை பாஜக சற்றே கூட்டும் எனத் தெரிகிறது.
கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது. எனினும், தொடர்ந்து வரும் முடிவுகள் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 2021 சட்டப்பேரவைத்த் தேர்தலில் தொடர்ச்சியாக வரலாற்று ரீதியான இரண்டாவது முறையாக வெற்றிபெறக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.
முற்பகல் நிலவரப்படி, ஆளும் இடது ஜனநாயக முன்னணி 89 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது. இந்த தேர்தல் முடிவு நிலவரங்களில் மற்றொரு சுவாரஸ்யமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும்தான் பாஜக வென்றிருந்தது.
ஆனால், இந்த முறை மூன்று தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிச்சூரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, நேமமில் கும்மனம் ராஜசேகரன் மற்றும் பாலக்காட்டில் மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெறும் அளவுக்கு பாஜக இருக்கிறது. பாலக்காட்டில் போட்டியிடும் மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் இரண்டு சுற்று எண்ணிக்கைகள் முடிந்தும் முன்னிலை வகித்து வருகிறார். 1500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
எனினும், மஞ்சேஸ்வரம் மற்றும் கொன்னி இருவரிடமிருந்தும் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இரு இடங்களிலும் பின் தங்கியுள்ளார். இதேபோல் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, யுடிஎஃப் வேட்பாளர் பத்மஜா வேணுகோபாலுக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதேபோல் பாஜகவின் எதிர்பார்ப்புக்குரிய தொகுதியான நேமமில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. கேரள சட்டப்பேரவையில் 2016-ல் முதன்முறையாக இங்குதான் பா.ஜ.க ஒரு இடத்தை வென்றது.
இங்கு சிட்டிங் எம்எல்ஏ ராஜகோபால் மாற்றப்பட்டு முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் நிறுத்தப்பட்டார். எதிர்பார்த்தபடி, அவர் முன்னிலை வகித்து வருகிறார். தன்னை எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவன்குட்டியை விட 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
முன்னதாக, கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.