முர்ஷிதாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த முக்கியமான காரணம், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கர்ர்ப்பிணி பெண். மற்றொருவர் 8 வயது சிறுவன். இந்த கொலை சம்பவம் மேற்குவங்கத்தில் தற்போது முக்கிய பேசுபொருளாக மற்றொரு காரணம் கொல்லப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். அதனால், இதற்கு பின்னார் அரசியல் காரணங்கள் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
விஜயதசமி அன்று ஊரே தசரா பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்த கோபால் பால் (35), அவரது மனைவி பியூட்டி(30), மகன் ஆகியோர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் தங்களது வீட்டில் கிடந்தனர். இந்தக் குடும்பம் விஜயதசமி பூஜைக்கு வராததால் அருகிலிருந்த மக்கள் கோபாலின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கொடூர கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சொத்துக்காக கொலை நடந்ததாக அல்லது அரசியல் ரீதியிலான கொலையா என பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கோபால் பால் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர். சமீபத்தில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்திருந்தார். அதனால், இந்த கொலை சம்பவம் அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில பாஜகவினர் ஆளும் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர். அதேபோல், இந்த கொலை சம்பவம் குறித்து யாரும் குரல் கொடுக்கவில்லை என 59 பிரபலங்கள் நோக்கி அவர்கள் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இதனிடையே, மேற்குவங்க அதிகாரிகளை தேசிய பெண்கள் நல ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. இதுபோன்ற கொலை சம்பவங்களை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மேற்குவங்கத்தில் இந்த கவலைக்கிடமான நிலைமை குறித்து முதல்வர் மற்றும் காவல்த்துறை தலைவருக்கும் கடிதம் எழுதுவதாகவும் பெண்கள் நல ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியிலான கொலைகள் நடக்கும் மாநிலங்களில் மேற்குவங்கமும் ஒன்று. இதற்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரை அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால், சமீப காலமாகவே திரிணாமுல் கட்சிக்கு எதிராக மேற்குவங்கத்தில் பாஜக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இருதரப்பினரிடையே அடிக்கடி மோதல்களும் எழுந்து வருகின்றன. அதனால்தான் இது அரசியல் ரீதியிலான கொலையாக இருக்குமோ என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. இதனிடையே இந்தக் கொடூரச் கொலை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.