தீபாவளி பண்டிகைக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் எதிரொலியாக டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகள் அபாய கட்டத்திற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை கடந்தும், நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சிக்கித் தவித்து வரும் டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகள் கடும் மாசுபாட்டிற்கு ஆளாகியுள்ளது.
இன்று காலை எடுக்கப்பட்ட காற்று மாசு அளவீட்டின் படி, காஷியாபத்தில் 418 ஏக்யூஐ(AQI) நிலைக்கு மாசுபாடு கண்டறியப்பட்டிருக்கிறது. நொய்டா பகுதியில் 250 மற்றும் 379 அளவிற்கும், குருகிராம் அதை விடவும் மோசமான நிலையை அடைந்து 638 மற்றும் 668 அளவிற்கு சென்றிருக்கிறது. ஏக்யூஐ அளவீட்டின் படி காற்று மாசு என்பது, 0 முதல் 50 வரை இருந்தால் நன்று. 50 முதல் 100 வரை ஏற்றுக்கொள்ளத்தக்கது. 101 முதல் 200 வரை மிதமானது. 201 முதல் 300 வரை மோசமானது. 301 முதல் 400 வரை மிக மோசமானது. 401 முதல் 500 வரை அபாயகரமானது.
இன்று காலை காஷியாபாத்தில் மக்கள் சுவாகிக்க முடியாத நிலை இருந்துள்ளது. மக்கள் முகத்தில் உறைகளை அணிந்து சென்றுள்ளனர். பலருக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. சாலைகள் பனிமூட்டம் போல, புகைமூட்டமாய் இன்னமும் நிரம்பியிருக்கிறது.