செய்தியாளர் - ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் பெங்களூர் சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும் அனாதை இல்லத்தில் சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரியங்க் கங்கூன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனாதை இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகிய இருவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த கும்பல் ஒன்று, அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். பின்னர் அங்கிருந்த போலீசார் அந்த கும்பலை விரட்டி அடித்தனர்.
இதனையடுத்து, அனாதை இல்லத்தில் சோதனை நடத்திய போது, இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
அந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், "அனாதை இல்லத்தில் சேர்ந்த போது பள்ளிக்குச் சரியாக அனுப்பினர். தற்போது பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இருட்டு அறையில் அடைத்து வைத்தனர். எங்களை வளைகுடா நாட்டிற்குக் கடத்த முயற்சி செய்கின்றனர்" என கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அனாதை இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.