தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவும் கூட்டாக சேர்ந்து பவார் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சரானார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அஜித் பவாரின் இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட முடிவு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று 12.30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி உத்தவ் தாக்ரே மற்றும் சரத் பவார் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய சரத் பவார், “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான விசுவாசிகள் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டார்கள். என்சிபியின் ஒரே எம்எல்ஏ ஆன அஜித் பவார் மட்டுமே பதவியேற்பில் கலந்து கொண்டுள்ளார். குதிரை பேர அரசியல் மூலம் பாஜக அமைத்துள்ள மத்திய மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆட்சியை எங்கள் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. வெறும் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அஜித் பவார் தன் பக்கம் உள்ளதாக கூறியுள்ளார்.
பாஜகவை ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும் எனத் தெரிவித்து கொள்கிறேன். சிவசேனா கட்சியுடன் மட்டுமே ஆட்சி அமைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது. தேசியவாத காங். சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் விலக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சட்டமன்ற குழுத் தலைவர் இன்று மாலை 4 மணிக்கு தேர்வு செய்யப்படுவார். ஆகவே அஜித் பவார் மீது கட்சி விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.