முதல்வன் படத்தின் ரீமேக்கான நாயக் படத்தை குறிப்பிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது தொண்டர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால், பதவியேற்றுக் கொண்டார். தொடர்ச்சியாக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர், கெஜ்ரிவாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவையொட்டி ராம்லீலா மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராம்லீலா மைதானம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டதோடு, ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் தொண்டர்கள், ஷங்கர் இயக்கிய இந்திப் படமான நாயக்கை குறிப்பிட்டு வாழ்த்துகள் தெரிவித்தனர். நாயக் மீண்டும் திரும்பி விட்டார் என்ற வாசகத்துடன் கூடிய பேனர்களும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வெளியான முதல்வன் படத்தின் ரீமேக்கே இந்தியில் நாயக் என எடுக்கப்பட்டது. ஒருநாள் முதல்வராக பதவியேற்று லஞ்சம் ஊழலை ஒழிக்கும் வகையில் படத்தின் நாயகன் இருப்பார். அதைப்போல லஞ்சம் ஊழலை ஒழிக்கும் அதிரடி முதல்வரே கெஜ்ரிவால் என அவரது தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.