பட்டியலின இளைஞரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்த காவலர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

பட்டியலின இளைஞரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்த காவலர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்
பட்டியலின இளைஞரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்த காவலர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்
Published on

பட்டியலின இளைஞரை அடித்து துன்புறுத்திய காவல்துறை அதிகாரி மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள கலம்போலி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தினேஷ் பாட்டீல்.  இவர் மீது, காவல் நிலைய வளாகத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த விகாஸ் உஜ்கரே (28) என்ற இளைஞரைத் தாக்கியதற்காக, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரவு 8 மணியளவில் விகாஸ் உஜ்கரே, தனது நண்பருடன் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது உஜ்கரே உடன் வந்த நண்பருக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து உஜ்கரே, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே, கலம்போலி காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீசார் சண்டையை விலக்கிவிட்டனர். உஜ்கரே உடன் வந்தவருக்கு ரத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு உஜ்கரேவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில்  உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தினேஷ் பாட்டீல் என்பவர், உஜ்கரேவை அடித்து துன்புறுத்தியதாகவும், சாதி ரீதியாக திட்டியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து உஜ்கரே கூறுகையில், ''காவல் அதிகாரி தினேஷ் பாட்டீல் என் முகத்தில் எச்சில் துப்பினார். அவரது காலணிகளை நக்குமாறு என்னை கட்டாயப்படுத்தினார். என்னை தரையில் உட்கார வைத்து சாதி பெயரை சொல்லி திட்டினார். அதிகாரி தினேஷ் பாட்டீல் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சைப் பெற்றுவிட்டு வீடு திடும்பினேன்.

பின்னர் ஒரு வழக்கறிஞர் மூலமாக காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தேன். எனது வாக்குமூலத்தை மண்டல துணை கமிஷனர் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ஜனவரி 14ம் தேதி பதிவு செய்தனர்” என்று உஜ்கரே கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக கலம்போலி காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் சஞ்சய் பாட்டீல் கூறுகையில், ''தினேஷ் பாட்டீலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com