பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா முதலமைச்சராக மே 29 ஆம் தேதி பதவியேற்கிறார்.
ஒடிசாவின் கட்டாக் நகரில் பிஜுபட்நாயக்- கியான்பட்நாயக் தம்பதியின் மகனாக 1946ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிறந்தவர் நவீன் பட்நாயக். தனது தந்தை அரசியல்வாதியாக இருந்தாலும், நவீன் பட்நாயக் அரசியலில் இருந்து விலகியே இருந்து வந்தார். 1997ஆம் ஆண்டில் தந்தை பிஜு பட்நாயக் மறைவைத் தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
2014ல் நாடு முழுவதும் மோடி அலை வீசியதாக கூறப்பட்ட சூழலிலும், பேரவைத் தேர்தலில் 117 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றார். அப்போது பாஜக 10 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும் பிடித்திருந்தது.
இந்நிலையில் இம்முறை தேர்தலில், மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த கிராமத்துப் பெண்கள் 8 பேரை நாடாளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தினார் நவீன் பட்நாயக். 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 112 இடங்களை கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தொடர்கிறார். பாஜக 23 இடங்களையும் காங்கிரஸ் 9 இடங்களையும் பிடித்துள்ளது.
2000 ஆம் ஆண்டில் பாஜக வேட்பாளர் பிடம்பர் ஆச்சார்யாவை 60, 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் நவீன் பட்நாயக். இதுவரை நான்கு முறை சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று நவீன்பட்நாயக் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தற்போது 5 வது முறையாக ஒடிசாவில் மே 29 ஆம் தேதி பதவியேற்கிறார்.