மத்தியப் பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக 3 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் காந்துவா மாவட்டத்தில் சிலர் பசுவைக் கொல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் ரகசிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொகாத் என்ற பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணி சென்றபோது, சிலர் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று பிடிப்பதற்குள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து அவர்களால் கொல்லப்பட்ட பசுவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்தப் பசு கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். பின்னர் அவர்களை தேடிவந்த காவல்துறையினர், அவர்கள் ஒற்றுமை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்நிலையில் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களது பெயர் ராஜூ, ஷகில் மற்றும் அஸாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் மீது ஏற்கனவே பசுவதை வழக்குப் பதியப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பசுவைக் கொலை செய்ததற்காக தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.