மயானங்களில் பிணங்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், அதை தடுக்க `மின்சார மயானங்கள் முறை’ உள்ளிட்ட மாற்று முயற்சிகளை உருவாக்குமாறும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்கள். அதில் அவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மயானங்களில் பிணங்களை எரிக்கும் பொழுது அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும், அது காற்றில் கலந்து பல பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் கூறி, `சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மாற்று வழியில் பிணங்களை எரிப்பதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அதில் `வழக்கமான மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை கொண்டு சடலங்களை எரிக்கும் முறைக்கு பதிலாக மின்சாரத்தின் மூலமாக இயங்குவது, எரிவாயு குழாய்கள் பயன்படுத்துவது போன்ற மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்’ என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
தங்களது இந்த உத்தரவு, எந்த ஒரு மத நம்பிக்கையையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டதில்லை என்றும், `ஒரு சடலத்தை அழிப்பதற்கும் 350-ல் இருந்து 450 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படுகிறது. ஆகவே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து மக்கள் மத்தியில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்பதற்காகத்தான் இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தவும் செய்தார்.