ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றம் கடந்த 6ஆம் தேதி நிறைவேற்றியது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் பகுதியை சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டசபை அற்ற யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது. இது வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரிலுள்ள பிரதான கட்சியான தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மனுவில் ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370(1)(டி) படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை ரத்து செய்யமுடியாது. அத்துடன் குடியரசுத் தலைவரின் ஆணை ஜம்மு-காஷ்மீரின் ஆளுநரின் உத்தரவின் பேரில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டப் பேரவையின் ஒப்புதலை பெற்றிருக்கவேண்டும். ஆனால் மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. இது ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயக உரிமை பரிக்கும் விதத்தில் உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.