இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும் என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை இகழும் வகையில் பேசி இருந்தார். இந்த விவகாரம் தேசியளவில் விவாதப்பொருளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. இருவரதும் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதன் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது. இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தையும் அவமதிப்பதை ஏற்க முடியாது எனும் பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இவ்விவகாரம் அரபு நாடுகளிலும் எதிரொலித்தது. ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகள் இந்த கருத்துக்களுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
இதனிடையே 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும் என்று கூறியுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நபிகள் நாயகத்திற்கு எதிரான சர்ச்சையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என்பது 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்: பாஜக 8 ஆண்டு கால ஆட்சி, சாதனையா சரிவா? சுபவீ Vs வானதி சீனிவாசன் பங்கேற்ற விவாதம்