மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 உறுப்பினர்களின் பட்டியலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவிடம் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ளது.
குடியரசுத் தலைவர் 18-ஆவது மக்களவை அமைப்பதற்கான உத்தரவை பிறப்பித்த பிறகு, மக்களவைச் செயலகம் புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் உள்ளிட்ட அடுத்தகட்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களவைத் தலைவராக நரேந்திரமோடி முறைப்படி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்கிறார்.
இந்த விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக்அசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் மொய்து, நேபாள பிரதமர் புஷ்ப கமல் DAHAL PRACHANDA, பூட்டான் பிரதமர் TSHERING TOBGAY மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் அவருடன் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். மறுபுறம், டெல்லியில் முகாமிட்டுள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமார், கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களைப் பெற்றதால் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்குதேசம் உள்ளிட்ட 15 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமைக்கிறது. இதனால் அக்கட்சிகளுக்கான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டிய நிலை உள்ளது.
இச்சூழலில், 16 எம்பிக்கள் கொண்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநாயகர் பதவி, 3 மத்திய அமைச்சர் பதவி கோருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலவே 12 எம்.பிக்களைக் கொண்ட பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தலைவருமான நிதீஷ்குமார், மாநில வளர்ச்சிக்கான நிதி, மக்களவை துணை சபாநாயகர் பதவி, 2 அமைச்சர் பதவிகளை கேட்பதாக கூறப்படுகிறது. இதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பொது செயல்திட்டம் அமைத்து அதற்கான தலைமைப் பொறுப்பை தாம் வகிக்க நிதிஷ்குமார் விரும்புவதாகவும் தெரிகிறது.
அதேபோல, கேரளத்தில் முதன்முறையாக வெற்றியை தந்துள்ள சுரேஷ்கோபிக்கும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு உறுதுணையாக உள்ள பவன் கல்யாணின் ஜனசேனாவுக்கும் அமைச்சர் பதவி தரக்கூடும் என்று கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் நிதி அமைச்சகத்தை பாரதிய ஜனதா தன்வசமே வைத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு, ரயில்வே, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளையும் விட்டுக்கொடுக்காது எனக் கூறப்படுகிறது. எனில், எந்தெந்த துறைகள் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்பது ஆலோசனையில் இருப்பதாக தெரிகிறது.