மக்கள் தனியாரை விடுத்து பொதுப் போக்குவரத்தையே விரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் ஏற்பாடு செய்த MOVE என்ற தலைப்பிலான நவீன போக்குவரத்து வழிகள் குறித்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என்று கூறினார். போக்குவரத்து வசதிகள் அதிகரித்தால் எல்லா துறைகளிலும் வளர்ச்சியை உறுதிப்படுத்தலாம் என்றும், நவீன போக்குவரத்து வசதிகள் மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்திய பொருளாதாரம் எனக் கூறியுள்ள மோடி,100 ஸ்மார்ட் சிட்டிகள் கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து சேவைகள் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், மக்கள் பொதுப் போக்குவரத்தை விரும்பும் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.