மேற்குவங்க ‘Amphan'புயல் நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி- பிரதமர் மோடி அறிவிப்பு 

மேற்குவங்க ‘Amphan'புயல் நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி- பிரதமர் மோடி அறிவிப்பு 
மேற்குவங்க ‘Amphan'புயல் நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி- பிரதமர் மோடி அறிவிப்பு 
Published on
மேற்கு வங்கத்தில் ‘Amphan' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய வேண்டி நிவாரண தொகையாக ரூ 1000 கோடி வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  
 
வங்கக்கடலில் உருவான 'Amphan' புயல் நேற்றைய முன்தினம் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் மேற்கு வங்க மாநிலம் பெரும் சேதத்தைச் சந்தித்தது. அங்கு லட்சக் கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 70க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.  
 
 
இந்தப் புயல் ஒரு லட்சம் கோடி மதிப்பிற்குச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என மேற்கு வங்க அரசு கணித்துள்ளது. ஆனால் சேதத்தின் மதிப்பை முழுமையாகக் கணக்கிட இன்னும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கொல்கத்தா மேற்கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா ஆகிய பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  
 
 
இதனிடையே மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளைப் பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருடன் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் இருந்தார். அதன் பின்னர் பிரதமர் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்.  இதனிடையே இந்தப் புயலால்  ஒடிசா மாநிலமும் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது. ஆகவே அம்மாநிலத்தின் சேதத்தையும் பிரதமர் ஆய்வு செய்தார்.  அப்போது பிரதமருடன் முதல்வர் நவீன் பட்நாயக் உடன் இருந்தார்.
 
 
இந்நிலையில் மேற்குவங்கத்திற்கு மத்திய அரசு ரூ. 1000 கோடி  கொடுக்க உள்ளதாகப் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து  மேற்கு வங்கத்தில் சூறாவளி காரணமாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சமும், பலத்த காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனப் பிரதமர் கூறியுள்ளார். 
 
மேலும் ஒடிசா மாநிலத்தில் விரைவான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனக் கூறியுள்ள பிரதமர், அதற்கான  நிவாரணத் தொகையாக ஒடிசாவுக்கு 500 கோடி ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். 
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com