புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்தியில் மோடி அரசு, மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் மருத்துவப்படிப்பிற்கு பொதுக்கலந்தாய்வு முறையை கொண்டு வருகிறார்கள். அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள் அங்கேயே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. அதே போன்று செவிலியர் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை நடத்துகிறது மத்திய அரசு. இதிலிருந்தே, மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இது குறித்து தமிழக முதல்வர், குரல் கொடுக்கிறார். ஆனால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச மறுக்கிறார். ரங்கசாமியின் அதிகாரத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பறித்துள்ளார். அதன் வெளிப்பாடாக ‘முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என அழுது புலம்புகின்றார் ரங்கசாமி. இது கபட நாடகம்.
அரசியலமைப்பு சட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. புலம்ப வேண்டியதில்லை. சர்வாதிகாரி போல தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைக்கிறார்.
ஆளத் தகுதியில்லை என்றாலோ ஆள முடியவில்லை என்றாலோ முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியது தானே...
புதுச்சேரி நகர அமைப்புக் குழுவின் அனுமதியில்லாமல் பத்திரப்பதிவு நடைபெறுகிறது. கோயில் நிலங்கள் அரசு நிலங்கள் போலி பத்திரப் பதிவு செய்து ஆட்சியாளர்கள் மோசடி செய்து வருகின்றார்கள்.
இதை முதல்வர் ரங்கசாமி விசாரிக்க வேண்டும். இல்லையெனில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.