செய்தியாளர்: ரகுமான்
நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தீவிரமாக பணியாற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி வெற்றி பெறுவதற்கு அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சில திமுக தலைவர்கள் என்னையும் (நாராயணசாமி) காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி-யையும் ஒருமையில் பேசி கூட்டணி தத்துவத்தை மீறியுள்ளார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை கூட்டணி தர்மத்தை இதுவரை நாங்கள் மீறியது கிடையாது.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் எந்த கட்சியும் சாராத சுயேட்சை எம்எல்ஏ கலந்து கொண்டார். அதற்காக திமுக கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவரையும் என்னையும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்து மக்கள் மத்தியிலே எங்களுக்கு (காங்கிரஸ் கட்சிக்கு) கெட்ட பெயரை உருவாக்குவதற்காக திட்டமிட்டு திமுகவினர் செயல்படுகின்றனர். நாங்கள் எந்த காலத்திலேயும் கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. கூட்டணி தர்மத்தை மீறியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்தான். வில்லியனூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளரை திமுகவில் இணைத்துக் கொண்டு கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு விட்டு காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்வதற்கு உரிமை உண்டு, தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கும் உரிமை உண்டு, தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதற்கும் உரிமை உண்டு, அதற்கு யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால், தவறாக விமர்சனம் செய்து தரக்குறைவாக பேசுவதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கூட்டணியில் இருந்து கொண்டே எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை திமுகவில் சேர்க்கின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நாம் நம்முடைய நடவடிக்கைகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
I.N.D.I.A கூட்டணியில் திமுகவும் இருக்கின்றது, காங்கிரசும் இருக்கின்றது. ஆகவே திமுகவினர் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்றார்.
தொடர்ந்து திமுகவினரின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கத்திடம் கேட்டபோது... “அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என கூறிவிட்டார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில் புதுச்சேரியில் சமபலத்துடன் உள்ள காங்கிரஸ் - திமுகவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தேர்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.