நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில் மஹாராஷ்ட்ராவில் டிட்வாலா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் துரந்தோ விரைவு ரயிலின் 5 பெட்டிகள் நடைமேடை மீது இன்று காலை 6.30 மணிக்கு மோதியது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை எனவும் ஆனால் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 10 நாட்களில் 3வது ரயில் விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 25ம் தேதி உள்ளூர் மும்பை ரயிலின் 6 பெட்டிகள் மாஹிம் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர். முன்னதாக கடந்த 19ம் தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தர பிரதேச மாநிலம் கடோலி அருகே தடம்புரண்டதில் 24 பேர் பலியாகினர், 156 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.