சிபிஐ அதிகாரியை. இடமாற்றம் செய்ததற்காக, கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றத்திடம் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார்.
பீகாரின் முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. விசாரணை அதிகாரியாக சி.பி.ஐ., இணை இயக்குனர் ஏ.கே.சர்மாவையும் நீதிமன்றமே நியமித்திருந்தது.
இந்நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ், மத்திய ரிசர்வ் காவல் படைக்கு சர்மாவை இடமாற்றம் செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஏ.கே.சர்மா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 7 ஆம் தேதி நாகேஸ்வர ராவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு தனது பதிலை பிரமாண பத்திரமாக, நாகேஸ்வர ராவ் நேற்று தாக்கல் செய்தார். அதில், தனது தவறை உணர்ந்து கொண்டேன் என்றும் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற உள்நோக்கமோ, விருப்பமோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அவர் இன்று நேரில் ஆஜராவார் என்று தெரிகிறது.