நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் யாரேனும் பேக்கரி கடையில் ஸ்வீட்ஸ் வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்றால் அதில் மைசூர் பாக் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு மைசூர் பாக் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இது முதன்முதலில் கர்நாடாகாவின் மைசூரில்தான் உதயம் ஆனது. அதனால் இந்த ருசியான இனிப்பு பண்டத்தை மைசூர் என்ற பெயருடன் சேர்த்தே அழைக்கிறார்கள்.
இந்நிலையில், உணவு தரவரிசை தளமான டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட உலகின் சிறந்த 50 தெரு இனிப்புகளின் பட்டியலில் மைசூர் பாக் 14-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் குல்பி 18-வது இடத்திலும், குல்பி பலூடா 32வது இடத்தையும் பிடித்துள்ளது.
மைசூர் பாக் உலகின் சிறந்த தெரு உணவுகளில் ஒன்றாக இடம்பிடித்ததற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் பிரபலமான இனிப்பு வகையாக இருந்துவந்த மைசூர் பாக் இப்போது உலகளவில் பிரபலமானதைத் தொடர்ந்து அதன் விற்பனை இனி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.