முத்தலாக் சட்டவிரோதம் என இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த பெரும்பான்மை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மூன்றுபேர் முத்தலாக் சட்டவிரோதம் என்றும் இருவர் சட்டரீதியில் செல்லத்தக்கது எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முத்தலாக் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்த நடைமுறையில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அது கூறியுள்ளது. 6 மாதத்திற்குள் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம் அதுவரையில் முத்தலாக் முறைக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்த நிலையில், மூன்று நீதிபதிகள் ஒரு கருத்தையும் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்தையும் தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெகர், நீதிபதி நசீர் ஆகியோர் முத்தலாக் முறை சட்டரீதியில் செல்லத்தக்கது எனவும் நீதிபதிகள் குரியன், நாரிமன், லலித் ஆகியோர் முத்தலாக் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில் சுதந்திர இந்தியாவில் இதை ஏன் ஒழிக்க முடியாது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். தனிச்சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருந்தால் அந்தப் பிரச்னையில் நீதிமன்றம் தலையிடும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.