முத்தலாக் கூறுவது பாலின சமத்துவத்திற்கு எதிரானது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முத்தலாக் விவாகரத்து முறை இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதா என்பது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி ஜே எஸ் கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு முத்தலாக் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கிறது. முத்தலாக் என்பது இஸ்லாமின் அடிப்படை அம்சங்களில் ஒன்றா என்று விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் பலதார மணம் குறித்து தாங்கள் விசாரிக்கப் போவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்விசாரணை 6 நாட்களுக்கு நடைபெறும் எனத் தெரிகிறது.
இன்றைய விசாரணையின் போது முத்தலாக் விவாகரத்து முறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 15ஆம் தேதி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிடுவார் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில், இஸ்லாமியர்களின் தனி நபர்களின் சட்டங்களில் அரசு தலையிடக் கூடாது எனக் கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன.