அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் ஆனால் கோயில், மசூதி இரண்டும் வேண்டும் எனவும் கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான ஜமீர் அகமது கான் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரோஷன் பைக், ராம் கோயில் இந்தியாவில் கட்டப்படவில்லை என்றால் அது பாகிஸ்தானில் கட்டப்படும் எனவும் முஸ்லிம்கள் இந்து சகோதரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் ஆனால் கோயில், மசூதி இரண்டும் வேண்டும் எனவும் கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இரண்டு விருப்பங்களை கொண்டுள்ளதாகவும் ஒருபுறம் மசூதியும், மற்றொருபுறம் ராம் கோயில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நமக்கு சமாதானம்தான் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதைப்பற்றி நாம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லோக் சபா தேர்தலுக்காக பாஜக இப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதாகவும் நான்கரை ஆண்டுகாலம் கழித்து இப்போது இப்பிரச்னைப்பற்றி பேசுவதற்கு காரணம் என்ன எனவும் அகமது கான் கேள்வி எழுப்பியுள்ளார்.