"பாஜக ஆட்சியில்தான் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த சூழலில், கான்பூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
"ஒருகாலத்தில், உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது பல இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக விரோதிகளின் கிண்டல், கேலிகளுக்கு பயந்து பலர் கல்விச் சாலைகளுக்கு செல்வதையே நிறுத்திக் கொண்டனர். ஆனால், மாநிலத்தில் பாஜக ஆட்சி மலர்ந்ததில் இருந்து இந்த நிலைமை தலைகீழாக மாறியது.
பெண்களை கிண்டல் செய்பவர்களும், சீண்டுபவர்களும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகின்றனர். இதனை பார்த்து பெண்களுக்கு துணிச்சல் வந்துள்ளது. இன்று உத்தரப் பிரதேசத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நம்பிக்கையுடன், தைரியத்துடன் சென்று வருகிறார்கள்.
இஸ்லாமிய பெண்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த முத்தலாக் என்ற தண்டனையில் இருந்து அவர்களை விடுவித்தது பாஜக தான். இதனால் கோடிக்கணக்கான பெண்கள் முத்தலாக் கொடுமையில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் ஆட்சியில் மட்டுமே முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த நிலைமை தொடர வேண்டுமெனில், உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி தொடர வேண்டும். உத்தரப் பிரதேசத்தை மாஃபியாக்களின் கூடாரமாக மாற்றிய சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்" இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.