ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் நோன்பு மிகவும் முக்கியமானது. சூரியன் உதிப்பதற்கு முன் உணவு உண்டப்பின் மீண்டும் சூரியன் மறையும் வரை தண்ணீரும் எச்சிலும் கூட விழுங்காமல் மிகவும் கண்டிப்பான நோன்பை கடைப்பிடிப்பர். இப்படிப்பட்ட புனிதமான ரமலான் மாத்தில் தன் மதக் கோட்டுபாடுகளை மீறி மகத்தான மனித நேயத்தில் ஈடுபட்டுள்ளார்.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜேஷ் என்ற சிறுவனுக்கு தலசீமியா என்ற நோய் பாதிக்கப் பட்டது. அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப் பட்டது. ஆனால் அந்த அரிய வகை குரூப் ரத்தம் மருத்துவமனையிடம் இல்லை. இதனையடுத்து மருத்துவமனை உடனடியாக அன்வர் ஹுசேன் என்ற ரத்த தான குழு தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவனின் அரிய வகை ரத்தமும் அன்வர் ஹுசேனின் நண்பர் ஜாவேத் ஆலம் என்பவரின் ரத்தமும் ஒரே வகை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜாவேத் ஆலம்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர் ரத்தம் சிந்தக் கூடாது அல்லது வெளியாகக் கூடாது. அப்படி நிகழ்ந்தால் நோன்பு முறிந்துவிடும் என்பது இஸ்லாமியர்களின் மதக் கோட்பாடு.
ஆனால் இவை அனைத்தையும் அறிந்த ஜாவேத் ஆலம் சிறுவனின் உயிருக்காக நோன்பை கைவிடுவதில் தவறில்லை என ரத்ததானம் செய்தார். இறுதியில் ஜாவேத் ஆலமின் ரத்தம் ஏற்றப்பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது குறித்து பேசிய ஜாவேத் ஆலம் " இஸ்லாம் மதம் மனிதர்களுக்கு முதலில் உதவ வேண்டும் என்பதை எங்களுக்கு பயிற்றுவித்துள்ளது. உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவுவதற்காக என் நோன்பை முறித்ததில் தவறில்லை என்பதை நான் உணர்ந்தேன் அதையே செய்தேன்".