வாரணாசி லல்லாபுரா பகுதியைச் சேர்ந்தவர், நஜ்மா பர்வீன். நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான இவர், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பெற்றோரை இழந்துவிட்டார். 2014ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நஜ்மா பர்வீன், விஷால் பாரத் சன்ஸ்தான் எனும் அரசு சாரா அமைப்பின் நிறுவனரான பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவாவின் நிதியுதவியுடன் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார். சுமார் 8 ஆண்டுகள், அரசியல் அறிவியல் துறையில், மோடியைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்ட இவர், ‘நரேந்திர மோடியின் அரசியல் தலைமை: ஒரு பகுப்பாய்வு ஆராய்ச்சி (Narendra Modi’s Political Leadership: An Analytical Study)' என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்துள்ளார்.
இந்த ஆய்வறிக்கை 5 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன எனவும், இதற்காக பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறுகள் உட்பட 20 இந்தி புத்தகங்கள், 79 ஆங்கிலப் புத்தகங்கள், 37 பத்திரிகை இதழ்கள் ஆகியவற்றிலிருந்து குறிப்புகள் எடுத்ததாகவும் நஜ்மா தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆராய்ச்சிக்காக, மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் ஆகியோரையும் இவர் சந்தித்திருக்கிறார்.
இதையும் படிக்க: ‘நான் ரெடிதான் வரவா...’ ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் சுப்மன் கில்!
இதுகுறித்து நஜ்மா பர்வீன், ”பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது அம்மாநிலத்தின் வளர்ச்சியை உருவாக்கினார். அவரது புகழ் அதிகரித்து நாட்டின் பிரதமரானார். 2014 பொதுத்தேர்தல் நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையும் மாற்றியது. பாஜகவின் வெற்றி தேசிய அரசியலில், பிராந்தியக் கட்சிகளின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைத்தது.
ஒரு பிரதமராக, சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கிய மோடி, நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் பல முடிவுகளை எடுத்தார். அதனால்தான் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் சிலர் என்னுடைய முடிவை எதிர்த்தனர். ஆனாலும், என்னுடைய முடிவில் உறுதியாக இருந்து, தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 292 அடித்த ஆப்கானிஸ்தான்... நெருக்கடியில் ஒரே ஆளாக வெற்றியை தேடித்தந்த மேக்ஸ்வெல்
இதுகுறித்து ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, ”2014 பொதுத்தேர்தலில், அரசியல் பின்புலமில்லாத எளிய குடும்பத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற வரலாறு உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக, நஜ்மா பர்வீன் தனது ஆராய்ச்சிக்கு மிகவும் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். இவரின் ஆராய்ச்சி, கடந்த 9 ஆண்டுகளில் பிரதமராகப் பல்வேறு துறைகளில் மோடி கொண்டுவந்த நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது" எனத் தெரிவித்துள்ளார்.
மோடியைப்போலவே அரசியல்வாதியாக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் எனக் கூறப்படும் நஜ்மா பர்வீன், பாரதிய அவாம் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து, அதற்கு அவரே தலைவராகவும் இருக்கிறார். மேலும், முத்தலாக்கிற்கு எதிரான இயக்கத்தில் பர்வீன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நடைமுறைக்கு எதிராக மோடி அரசு சட்டம் இயற்றியபோது, பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல் முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர்.
இதையும் படிக்க: நடக்கவே நடக்காது என்றதை நடத்திக் காட்டிய மேக்ஸ்வெல்.. குவியும் பாராட்டுகள்!