”திடீரென ஏன் பர்தாவுக்கு தடை?”- போராட்டத்தில் இறங்கிய உடுப்பி இஸ்லாமிய கல்லூரி மாணவிகள்!

”திடீரென ஏன் பர்தாவுக்கு தடை?”- போராட்டத்தில் இறங்கிய உடுப்பி இஸ்லாமிய கல்லூரி மாணவிகள்!
”திடீரென ஏன் பர்தாவுக்கு தடை?”- போராட்டத்தில் இறங்கிய உடுப்பி இஸ்லாமிய கல்லூரி மாணவிகள்!
Published on

கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்று, பர்தா அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இயங்கி வருகிறது குண்டாப்பூர் அரசுக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதாவது, கல்வி பயிலும் இடமான கல்லூரியில், மத அடையாளத்தை தாங்கி இருக்கும் பர்தாவை அணிய முஸ்லிம் மாணவிகளை அனுமதிக்கக் கூடாது என்பது இந்து மாணவர்கள் பலரின் கோரிக்கையாக இருந்தது. எனினும், கல்லூரி நிர்வாகம் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த சூழலில், இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு பயிலும் இந்து மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், காவி துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து, அவர்களை கல்லூரியில் இருந்து வெளியேறுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், "இந்து மத அடையாளமான காவித் துண்டை அணிந்து கல்லூரிக்கு வருவது தவறு என்றால், முஸ்லிம் மதத்தின் அடையாளமான பர்தாவை அணிந்து வருவதும் தவறுதான். எனவே பர்தா அணிந்த மாணவிகளையும் கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும்" என வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து, நேற்று முஸ்லிம் மாணவிகளின் பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், இனி கல்லூரிக்கு பர்தா அணிந்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இருந்தபோதிலும், இன்று 25-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்தனர். இதையடுத்து, அவர்கள் கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவிகள், கல்லூரி வாசலிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஒரு முஸ்லிம் மாணவி கூறும்போது, "இந்தக் கல்லூரியில் சேர்ந்தது முதல் நாங்கள் பர்தா அணிந்து வருகிறோம். இதுவரை அதற்கு அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகம் திடீரென இந்த முடிவை எடுத்தது ஏன்? ஒரு சிலரின் மிரட்டலுக்கு கல்லூரி நிர்வாகம் அடிபணியக் கூடாது" என்றார். இதனிடையே, பர்தா அணிய தடைவிதிக்கக் கூடாது எனக் கோரி அக்கல்லூரி மாணவிகள் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரி பர்தா அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com