குஜராத் மாநிலத்தில், இஸ்லாமிய சகோதரர்கள் மூவர், பிராமணர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் இறப்பு இந்து முறைப்படி அனைத்து இறுதி சடங்குகளையும் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்தின் சவர்குண்ட்லா பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரு நெகிழ்ச்சியான மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமிய சகோதரர்கள் மூவர், பிராமணர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் இறப்பு இந்து முறைப்படி அனைத்து இறுதி சடங்குகளை செய்துள்ளனர்.
யார் இந்த இஸ்லாமிய சகோதரர்கள்? அவர்கள் ஏன் இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்பதற்கு பின்னால், ஒரு அற்புதமான இந்து - முஸ்லீம் நண்பர்களின் பாசக் கதை இருக்கிறது. பிக்கு குரேஷ் மற்றும் பானுஷங்கர் பாண்டே இருவரும் கூலித் தொழிலாளியாக இருந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியுள்ளனர். கிட்டத்தட்ட 40 வருடங்களாக அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளார்கள். குரேஷி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அப்போது பாண்டே மிகவும் மனமுடைந்து போனார்.
பானுசங்கர் பாண்டேவுக்கு குடும்பம் கிடையாது. சில வருடங்களுக்கு அவரது கால் முறிந்துபோனது. அப்போது, குரேஷி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது வீட்டிற்கு வந்துவிட்டார். குரேஷியின் குடும்பத்தில் ஒருவராக அவர் ஆகிவிட்டார். குரேஷிக்கு அபு, நசீர் மற்றும் ஸுபர் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இஸ்லாமிய சகோதரர்களான அபு, நசீர் மற்றும் ஸுபெர் குரேஸி ஆகியோர் தினசரி கூலி வேலை பார்த்து வருகிறார்கள். நாள்தோறும் 5 முறை நமாஸ் செய்து இஸ்லாமிய முறைப்படி வாழ்ந்து வருகின்றனர். ரம்ஸான் நோன்பையும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.
பாண்டே குறித்து நசீர் கூறுகையில், “எங்களுடைய குழந்தைகள் அவரை தாத்தா என்று அழைப்பார்கள். எங்களுடைய மனைவிகள் அவரது காலினை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். இஸ்லாமிய மத பண்டிகைகளில் முழு மனசுடன் கலந்து கொள்வார். எங்கள் குழந்தைகளுக்கு மறக்காமல் பரிசுப் பொருட்களை வாங்கி கொடுப்பார்” என்கிறார் பாசத்துடன்.
பானுஷங்கர் பாண்டே உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு அவரது நண்பர் குரேஷியின் மகன்கள் மூவர் இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளனர். இதுகுறித்து குரேஸி கூறுகையில், “பானுசங்கர் மாமா படுக்கையில் முடியாமல் இருந்த போது, ஒரு இந்து குடும்பத்திடம் இருந்து கங்கை நீரை கொண்டு வந்தோம். அவர் உயிரிழந்ததை அடுத்து, பிராமண குடும்பங்கள் கடைபிடிக்கப்படும் சடங்குகளின் படி அவர் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அக்கம்பத்து வீட்டாரிடம் தெரிவித்தோம். அவரது இறுதி சவ ஊர்வலத்தின் போது பாடையை தூக்கிச் செல்ல ஒப்புக் கொண்டோம்” என்றார்.
பாண்டேவின் சடலத்திற்கு நசீரின் மகன் அர்மன் தீ மூட்டினார். “12 ஆம் நாள் நிகழ்வின் போது அர்மானின் தலையை மொட்டையடிக்க உள்ளோம். ஏனெனில் இந்து வழக்கத்தின் படி அவ்வாறு செய்வார்கள்” என்கிறார் நசீர். பானுசங்கர் இறக்கும் வரை அவருக்கு வீட்டில் தனியாக சைவ உணவு சமைத்து கொடுத்துள்ளனர். “பானுசங்கரின் இறுதி சடங்குகளை இந்து முறைப்படி நடத்தியதன் மூலம் அபு, நசீர் மற்றும் ஸுபர் ஆகியோர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்து முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளார்கள்” என அம்ரெலி ஜில்லா பிராம் சமாஜ் அமைப்பின் துணைத் தலைவர் பராக் திரிவேதி கூறியுள்ளார்.
courtesy - TOI