மும்பையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான முனாப் கபாடியா, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தனது தாயார் நபிசா செய்யும் உணவுப் பண்டங்களைக்கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க முனாப் திட்டமிட்டுள்ளார்.
தனது உணவகத்தில் முக்கியமாக விற்கப்போகும் உணவுகளை சோதிக்க வித்தியாசமான திட்டம் ஒன்றையும் முனாப் செயல்படுத்தியுள்ளார். இதற்காக தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் ஓரு நாள், முனாப் தனது வீட்டில் உணவு விருந்திற்க்கு அழைத்துள்ளார். அப்போது, அம்மா கையால் சமைத்த, விற்பதற்கு திட்டமிட்டுள்ள உணவுகளை அனைவருக்கும் பரிமாறி ருசி எப்படி? என்று அறிந்திருக்கிறார். இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் கருத்தையும் அறிய, ஃபேஸ்புக்கில் வேர்ட் ஆஃப் மவுத் (Word of Mouth) என்ற பெயரில் தொடர்ந்து பதிவிட்டு, மகளிர் குழுவினர் சிலரை தன் வீட்டிற்கு அழைத்து மற்றொரு விருந்து வைத்துள்ளார்.
பின்னர், போஹ்ரி கிட்சென் என்ற உணவகம் ஒன்றை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளார். எதிர்பார்த்ததைப் போலவே தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் முனாப், தனது கூகுள் பணியையும் துறந்துவிட்டார்.
இதனையடுத்து முழுவீச்சில் தனது உணவக வேலைகளை கவனிப்பதில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். தனது வெற்றிக்குக் காரணமான தொழில் தந்திரத்தை வெளிப்படையாக சொல்லும் முனாப், தன் அம்மாவின் கையால் செய்த மட்டன் சமோசா விற்பதற்காகவே கூகுளில் பார்த்த வேலையை தூக்கிஎறிந்துவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.