இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மே 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்து பின்னர் விடுவித்தனர். இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விளையாட்டுத்துறை, திரைத்துறையை சேர்ந்த சில பிரபலங்களும் குரல் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வருமாறு சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது மும்பை இளைஞர் காங்கிரஸ்.
பாந்த்ரா வெஸ்ட் பெர்ரி கிராஸ் சாலையில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் பங்களாவுக்கு வெளியே மும்பை இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அந்த பேனரில் அநீதி இழைக்கப்பட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் குரலெழுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
"சச்சின் நீங்கள் பாரத ரத்னா விருது வென்றவர்; முன்னாள் எம்.பி; கிரிக்கெட்டில் ஜாம்பவான். ஆனால், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் குறித்து ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறீர்கள்? பிரிஜ் பூஷண் மல்யுத்த வீராங்கனைகளை துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உங்களது குரல் மதிப்புமிக்கது. அதை இந்த வீராங்கனைகளுக்காக பயன்படுத்துங்கள். தயவுசெய்து குரல் கொடுத்து வீராங்கனைகளுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள்" என்று அந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய, சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் அறிவித்தனர். அவர்களது முயற்சியை விவசாய சங்க அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
மேலும், நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மேலும், போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என்று உலக மல்யுத்த அமைப்பு தெரிவித்துள்ளது.