'இப்போது நினைத்தால்கூட நெஞ்சு பதறுகிறது' - மும்பை தாக்குதலில் தப்பியவர்களின் ஆறாத வடுக்கள்

'இப்போது நினைத்தால்கூட நெஞ்சு பதறுகிறது' - மும்பை தாக்குதலில் தப்பியவர்களின் ஆறாத வடுக்கள்
'இப்போது நினைத்தால்கூட நெஞ்சு பதறுகிறது' - மும்பை தாக்குதலில் தப்பியவர்களின் ஆறாத வடுக்கள்
Published on
13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி நடத்திய கொடூரமான தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்துப் போனது.
நவம்பர் 26, 2008. கடல் மார்க்கமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், மீனவர்களை கொலை செய்து அவர்களின் படகில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் ஊடுருவினர். அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர். எங்கும் போர்க்களமாக காட்சியளித்தது மும்பை.
இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும், இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவனை தவிர, 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர தாக்குதலில், இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 2012 நவம்பர் 21ஆம் தேதியன்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு கடந்த ஆண்டு வேறு ஒரு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து உள்ளது.
மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தாக்குதலால் ஏற்பட்ட துயர வடுக்கள் தப்பிப் பிழைத்தவர்கள், நேருக்கு நேர் பார்த்தவர்களின் மனங்களில் இருந்து இன்னும் அழியவில்லை.
அன்றைய தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான மும்பையில் டாக்ஸி ஓட்டிவந்த ஷியாம் சுந்தர் சவுத்ரி, இப்போது 13 வருடங்களாக படுத்த படுக்கையாக கிடக்கிறார். இதுகுறித்து அவரது மனைவி பெபி சவுத்ரி கூறுகையில், ‘’13 ஆண்டுகள் கடந்துவிட்டன. என் கணவர் அன்று வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அவர் நெடுஞ்சாலையை கடந்தபோது, சிக்னலை உடைத்துக்கொண்டு கார் ஒன்று பாய்ந்தது. காருக்குள் இருந்தவர்கள் என் கணவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தோட்டாக்கள் அவரது தலை மற்றும் தோள்பட்டையில் பாய்ந்தன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் தலையில் குண்டடி பட்டதால் நினைவாற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, அதன்பிறகு முற்றிலும் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரால் அசையவோ, பேசவோ, சாப்பிடவோ முடியாது. அவருக்குப் பார்க்கவும் கேட்கவும் மட்டுமே தெரியும். கடந்த 13 ஆண்டுகளாக அவர் படுக்கையை விட்டு எழவேயில்லை.
அரசிடமிருந்து நிதியுதவியாக ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. குடும்பப் பாரத்தை சுமக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வேலைத் தேடி அலைந்தேன். எங்குமே கிடைக்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களில் காவலாளியாக வேலை செய்ய ஆரம்பித்தேன். என் குழந்தைகளின் படிப்புக்கான செலவை டாடா அறக்கட்டளை ஏற்றது. அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் வேலைக்கு செல்லும்போது என் கணவரை அவரது அம்மா பார்த்துக் கொள்வார். குழந்தைகளை என் அம்மாவிடம் விட்டுவிடுவேன். ஆனால் கடந்த ஆண்டு எனது மாமியார் இறந்து விட்டார். இதனால் நான் பார்த்துவந்த காவலாளி வேலையை விட்டுவிட்டு எனது கணவரை முழு நேரமாக வீட்டில் அமர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கு வேளாவேளைக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்; மருந்து கொடுக்க வேண்டும்; டயாப்பர் மாற்ற வேண்டும். இந்தச் சூழ்நிலையில் குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது. யாரும் உதவிக்கு வருவதில்லை. எனக்கு வேலை வேண்டி நகர் சேவக் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்துள்ளேன்’’ என்கிறார் அவர்.
ஷியாம் சுந்தர் சௌத்ரியின் மகன் டாடா அறக்கட்டளை உதவியுடன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இவர்களது மகள் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். பிள்ளைகள் வேலைக்கு சென்றதும் தங்களின் கஷ்டம் தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் பெபி சவுத்ரி.
தீவிரவாதிகளுடன் நேருக்குநேர் சண்டையிட்ட ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஜில்லோ யாதவ் அன்றைய தினத்தை நினைவு கூர்கையில், ‘’மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அன்று இரவுப் பணியில் இருந்தேன். இரவு 9.30 மணியளவில் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. மக்கள் அலறியடித்து ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் என்னிடம் இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகச் சொன்னார். அதற்குள் பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்துவிட்டனர். அவர்கள் துப்பாக்கிகளை ரீலோட் செய்வதை பார்த்தேன். அங்கிருந்த காவலர்களின் துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கிச் சுட்டேன். ஆனால், துப்பாக்கிக் குண்டு அவர்களைத் தாக்கவில்லை. பின்னர் அவர்கள் என்னை நோக்கி சுடத் தொடங்கினர். நான் சுவருக்குப் பின்னால் மறைத்துக்கொண்டேன்.
எனது கையில் துப்பாக்கி இருந்ததால் தீவிரவாதிகள் என்னை நோக்கி முன்னேறி வந்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். எப்படியோ நான் தூண்களுக்கும் சுவர்களுக்கும் இடையில் மறைத்துக்கொண்டேன். அருகிலிருந்த ஒரு நாற்காலியை தூக்கி பயங்கரவாதிகளில் ஒருவன் மீது வீசினேன். பின்னர் அவர்கள் ஸ்டேஷனுக்கு வெளியே சென்றனர். நான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தால்கூட மனம் பதறுகிறது’’ என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com