கொரோனா காரணமாக வெளியில் சென்று சமையல் பொருட்களை வாங்க தயங்கும் பலரும், ஆன்லைனில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில ஆன்லைன் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. மும்பையில் சீமா என்ற ஆசிரியர் ஆன்லைனில் ரூ.1716க்கு மளிகைப்பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார்.
பின்னர் சில மணி நேரங்களில் அவரது ஆர்டரை அவரே கேன்சல் செய்துள்ளார். ஆனால் அவரது ரூ.1716 பணம் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக ஆன்லைன் நிறுவனத்தின் செயலி வழியாக புகார் அளித்துள்ளார். பணம் சில தினங்களில் வங்கிக் கணக்கிற்கே வரும் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் திரும்ப வரவில்லை.
எனவே இணையத்தில் தேடி கஸ்டமர் கேர் எண்ணை எடுத்துள்ளார் சீமா. அந்த எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் சில லிங்குகளை கொடுத்து அதனை பதிவிறக்கம் செய்யக் கூறி உள்ளனர். அவர்கள் கூறியபடி அனைத்தையும் சீமா செய்துள்ளார். சில மணி நேரத்தில் அவரது கணக்கில் இருந்து ரூ.1.2 லட்சம் பணம் எடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீமா, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இணையத்தில் நேரடியாக தேடி எடுக்கப்படும் கஸ்டமர்ஸ் கேர் எண்கள் பல போலியானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்