மும்பையில் பெய்துவரும் பலத்த மழையால், ரயில், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது.
மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை, தானே உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெய்துவரும் மழை காரணமாக, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டவாளங்கள் மழை நீரில் மிதப்பதால் ரயில் சேவை முடங்கியுள்ளது. குர்லா - சியோன், வாஷி - தானே ஆகிய பகுதிகளுக்கு இடையேயும் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
விமான சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு வரை, 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய 280 விமானங்களின் சேவை தாமத மானதாக மும்பை விமான நிலையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானங்கள் திடீரென ரத்து செய்யப் பட்ட தால் பயணிகள் விமான நிலையத்திலேயே நேற்றிரவு தூங்கினர்.
மழை இன்றும் தொடரும் வானிலை மையம் அறிவித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது.