போலீஸ் வேலையில் சேருவதற்காக தில்லுமுல்லுவில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில், போலீஸ் வேலையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடந்தது. பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். வேலையில் சேர ஆண்களின் உயரம் 165 செ.மீ இருக்க வேண்டும். உடல் தகுதி தேர்வுக்கு வந்த ராவ்ஜி (வயது 27) என்பவர் உயரம் அரை செ.மீ கம்மி. அரை செ.மீக்காக வேலையை இழக்க முடியுமா என்று மல்லாக்கப் படுத்து யோசித்த ராவ்ஜி புத்திசாலித்தனமாக ஒரு முடிவெடுத்தார். அதாவது கேரம் போர்டு காயினை தலைக்குள் ஒட்ட வைத்து, உயரம் அதிகமாக இருப்பது போல் ஏமாற்ற நினைத்தார். நினைத்தது போலவே முடிக்குள் காயினை ஒட்டினார். தேர்வுக்கு வந்தார். அவரது உயரத்தை அளந்த போலீஸ்காரரான கிரண் டைடேவுக்கு ஏதோ ஒரு டவுட். தலைக்குள் ஏதோ முட்டிக்கொண்டு நிற்கிறதே என யோசித்தார். கையை வைத்துப் பார்த்தால் கேரம் போர்டு காயின்கள். என்னய்யா இது என்றார் டைடே. பல்லைக் காட்டினார் ராவ்ஜி. பிறகு என்ன, சீட்டிங் வழக்கில் அவரை சிறையில் தள்ளியிருக்கிறது போலீஸ்.
இதே போல ராகுல் பட்டீல் என்பவரும் தேர்வுக்கு வந்தார். அவரது உயரம் சரியாக இருந்தது. ஆனால் ஏதோ சந்தேகப்படும் படி இருப்பதாகத் தோன்ற, போலீசார் தலையில் கைவைத்தனர், கையோடு வந்துவிட்டது தலைமுடி. டோப்பா. உயரத்தைக் கூட்ட ஒரு அடி உயரத்தில் பார்ட்டி, டோப்பா அணிந்திருப்பது தெரிய வந்தது.
அவுரங்காபாத்தை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவரை சோதித்தபோது, அவரது கால் தரையை தொடவே இல்லை. ஏன் என்று யோசித்த போலீஸ், ‘ஏம்பா குதிகாலை தூக்கு’ என்று சொல்ல, காலில் 5 ரூபாயின் காயினை ஒட்ட வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.