மும்பையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணும், காவல்துறையினரும் மாறிமாறி தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மேன்கர்ட் என்ற பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பெண் ஒருவர் காய்கறிகளை தள்ளு வண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
சீல் வைக்கப்பட்டுள்ள பகுதி என்பதால் வண்டியை எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்திய போது, விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காய்கறி வண்டியை காவல்துறையினர் கவிழ்த்து விடவே வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதையடுத்து காய்கறி விற்ற பெண் வண்டியை தள்ளிய பெண் போலீஸாரை தாக்க, அவரும் பதிலுக்கு தாக்கினார். அதற்குள் சுற்றியிருந்த ஆண், பெண் என இருதரப்பு போலீஸார் அந்த பெண்ணை தாக்கினர். அவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்தனர். இந்நிலையில் பணியில் இருந்த காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.