இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ஒருவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமாக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவர், மும்பை அணிக்கு கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றதுமுதல் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில், தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்னைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இவர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காக விளையாடி வருகிறர். இவர்களின் சகோதரரான (மாற்றாந்தாய் மகன்) வைபவ் பாண்டியா கடந்த 2021ஆம் ஆண்டு ஹர்திக் மற்றும் க்ருணால் ஆகியோருடன் இணைந்து ’பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருந்தார்.
அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் முதலீடு செய்து இருந்தனர். வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருந்தனர். இந்த நிலையில், வைபவ் பாண்டியா தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி விற்பனையை மடைமாற்றி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்குத் தெரியாமல் தனி பாலிமர் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மூவருக்குமான நிறுவனத்தில் செய்ய வேண்டிய விற்பனையை தனது சொந்த நிறுவனத்தின் பெயரில் செய்து சுமார் 4.3 கோடி ரூபாய் வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையிடம் ஹர்திக் பாண்டியா சகோதரர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வைபவ் பாண்டியா நேற்று கைது செய்யப்பட்டதுடன் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.