விராலி மோடி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணொருவர், மும்பை சார் பதிவாளர் அலுவலகத்தில் தன் திருமணத்தின்போது தனக்கு ஏற்பட்ட துயர சம்பவத்தை தனது x வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவரின் பதிவு பலரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த விராலி மோடி என்ற அந்த மாற்றுத்திறனாளி பெண், திருமண நாளில் மும்பை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தன் திருமணத்தை பதிவுசெய்ய சென்றுள்ளார். அங்கு லிப்ட் வசதி இல்லாமல் இருந்துள்ளது. அவரால் நடக்க இயலாது என்பதாலும், அவர் வீல்-சேர் உதவிகொண்டு செயல்படுபவர் என்பதாலும் இரண்டாம் தளத்தில் செயல்பட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல மிகுவும் சிரமப்பட்டுள்ளார். அப்போது அங்குள்ள ஊழியர்களின் செயல்கள் அனைத்தும் அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது x வலைதளப்பக்கத்தில் விரிவாக தெரிவித்துள்ளார் அவர்.
அந்தப் பதிவில், “நான் ஒரு மாற்றுத்திறனாளி பெண். கடந்த 16/10/2023 அன்று மும்பை கார் பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது. அந்த அலுவலகத்தில் லிப்ட் இல்லை. அங்கிருந்தவர்களிடம் என் நிலை குறித்து கூறி, கீழே வந்து கையெழுத்து பெற முடியுமா என வினவினேன். கீழே வர முடியாது என்று கூறிவிட்டனர். ‘திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் மேலே வர வேண்டும்’ என்று கூறினார்கள்.
அங்கிருந்த படிகள், செங்குத்தாக இருந்தன. ஏறுவதற்கே சிரமமாக இருந்தது. இருந்தபோதிலும் ஊழியர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. எனக்கு, என் அரசாங்கத்தாலும் குடிமக்களாலும் உதவ முடியவில்லை. இந்நிகழ்வால் நான் மிகவும் மனமுடைந்து இருக்கிறேன். அடுத்தடுத்த அவர்களின் செயல்களால் இரண்டாவது தளத்திலிருந்த அந்த அலுவலகத்துக்கு, என்னை என் வீட்டார் தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டது.
திருமணத்துக்கு தயாராகும்போதே, என்னால் நடக்க இயலாது என்பதை நான் அந்த அலுவலகத்துக்கு தெரிவித்திருந்தேன். அப்படியிருந்தும் கூட, அங்கிருந்த ஊழியர்கள் யாரும் எனக்கு ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. வீல் சேரில் இயங்குபவர் என்பதாலேயே நான் நேசித்தவரை திருமணம் செய்துகொள்ளும் உரிமை எனக்கில்லாமல் போய்விட்டதா?
மனிதநேயம் மீது நான் வைத்த நம்பிக்கை இந்த செயலால் தற்போது போய்விட்டது. நானும் ஒரு இந்திய பிரஜைதான். எனக்கும் உரிமைகள் இருக்கிறதுதானே.
அங்கிருந்த செங்குத்தான பழைய படிகட்டுகளில் ஏறும் போது யாராவது அந்த படிகட்டுகளின் தவறி விழுந்தால் என்ன செய்வது? என் திருமணநாளில் நானே விழுந்திருந்தால் என்ன செய்வது? யார் வந்து பொறுப்பேற்பார்கள்?” என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இப்பதிவு பலரிடையே சோகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.