"உன் தந்தைக்குதான்!'' - பொறுப்பற்ற பதிலால் சர்ச்சையில் சிக்கிய மும்பை மேயர் கிஷோரி

"உன் தந்தைக்குதான்!'' - பொறுப்பற்ற பதிலால் சர்ச்சையில் சிக்கிய மும்பை மேயர் கிஷோரி
"உன் தந்தைக்குதான்!'' - பொறுப்பற்ற பதிலால் சர்ச்சையில் சிக்கிய மும்பை மேயர் கிஷோரி
Published on

தடுப்பூசி விநியோக ஒப்பந்தத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பிய ட்விட்டர் பயனருக்கு எதிராக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ள பதில், சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாநகரில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொரோனா தடுப்பூசியை ஏற்கெனவே வாங்கும் நிறுவனங்களை தவிர்த்து மற்ற நிறுவனங்களிடம் வாங்க மும்பை மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் வெளியிட்டு இருந்தது.

இந்த விவகாரத்தில், ட்விட்டர் பயனர் ஒருவர் மும்பை மேயர் கிஷோரி பட்னேகரை டேக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில், `யாருக்கு கொரோனா தடுப்பூசி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது?' என்று கேள்வி எழுப்ப, உடனே, "உன் தந்தைக்குதான்'' என இதற்கு மேயர் கிஷோரி கோபமாக ரிப்ளை கொடுத்துவிட்டார். மேயரின் இந்த ட்வீட் சிறிது நேரத்தில் வைரலாக சர்ச்சைகளையும் அது சம்பாதிக்க தொடங்கியது.

கண்டனங்கள் அதிகமாக எழவும் மேயர் கிஷோரி அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால், அது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் உலா வர, அரசியல் சர்ச்சையாக மாறியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மேயர் கிஷோரிக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த தலைவர் ரியாஷ் ஷேக் என்பவர், "மேயர் கிஷோரி தனது பதவிக்குரிய கண்ணியத்தை காக்கவேண்டும். இதுபோன்ற மோசமான கமெண்டுகள் மேயரின் பதவிக்கான கண்ணியத்தை குறைக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த ட்வீட்டை மேயர் பதிவிட்டாரா அல்லது அவரின் மீடியா மேலாளர்கள் பதிவிட்டார்களா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்" என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த மேயர் கிஷோரி, "கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும்போது போனை கட்சி நிர்வாகி ஒருவரிடம் கொடுத்திருந்தேன். அப்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நான் திரும்ப வந்ததும், அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

யார் இந்த கிஷோரி?

சிவசேனா சார்பில் மேயராகி இருக்கும் கிஷோரி, சாதாரண மில் தொழிலாளியின் மகள். இவர் நர்ஸாக பணிபுரிந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். சிவசேனா சார்பில் 2002-ல் முதன்முதலாக மும்பை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வானார். மூன்றாவது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்தான் கிஷோரிக்கு எதிர்பாராத விதமாக மேயர் பதவி கிடைத்தது. அதன்படி, தற்போது மும்பை மாநகராட்சியின் 77-வது மேயராக பணியாற்றி வருகிறார் கிஷோரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com