பர்தா அணிய மறுத்ததில் ஏற்பட்ட சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை கணவன் கத்தியாலே குத்திக்கொன்ற சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
36 வயதான இக்பால் ஷேக் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர், ரூபாலி(20) என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவரது பெயரையும் சாரா என மாற்றியுள்ளனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னை அதன்பின்பு பூதாகரமாகியிருக்கிறது.
இதுகுறித்து காவல் அதிகாரி விலாஸ் ரத்தோடு கூறுகையில், ’’இக்பாலின் குடும்பத்தினர் ரூபாலியை பர்தா அணியச்சொல்லி கட்டாயப்படுத்தியதால், கடந்த சில மாதங்களாக தனது மகனுடன் அந்தப் பெண் தனியாக வசித்து வந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இந்நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி விவாகரத்து மற்றும் குழந்தை யாரிடம் வளரவேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க ரூபாலியை சந்தித்துள்ளார் இக்பால்.
இரவு 10 மணியளவில் அவர்கள் சந்தித்தபோது இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை முற்றி சண்டையாக மாறியிருக்கிறது. உடனே ரூபாலியை ஒரு சந்துக்குள் இழுத்துச்சென்ற இக்பால் அங்குவைத்து கத்தியால் பலமுறை குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ரூபாலி’’ என்று கூறுகிறார். இக்பால்மீது இந்திய சட்டப்பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.