மும்பையைச் சேர்ந்த 73 வயது நபர் மீது, பாலியல் வன்கொடுமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாக, பெண் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த புகார் மனுவில், ’1987-ஆம் ஆண்டு அந்த முதியவரின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததாகவும், அதுமுதல் அந்த முதியவர் தன்னிடம் கட்டாய உறவு வைத்துக்கொண்டதாகவும், அதன்பிறகு 2017-ஆம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தன்னை இரண்டாவது மனைவி எனக் கூறி தன் கழுத்தில் மறைமுகமாக தாலி கட்டியதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், தன்னை வேறு ஒருவரை திருமணம் செய்யவும் முதியவர் சம்மதிக்கவில்லை எனவும், தன் தாயாருக்கு உடல்நலத்தில் பிரச்னை ஏற்பட்டதால் கம்பெனியில் இருந்து விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதற்குப் பிறகு அவரை மீண்டும் தொடர்புகொண்டபோது தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்தார். இதையடுத்தே அவர் மீது புகார் அளிக்கப்பட்டது’ என பாதிக்கப்பட்ட பெண் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்கரி மற்றும் நீலா அமர்வு பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பின்போது இந்த வழக்கை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் தீர்ப்பின்போது, ”31 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தாலும் 2018-ஆம் ஆண்டுதான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு காலதாமதமாக புகார் செய்வதற்கான காரணம் குறித்து விளக்கப்படவில்லை. மேலும் இடைப்பட்ட காலத்தில் மனுதாரர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால்தான் இப்போது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
தவிர, இந்தப் புகாருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட நபர் எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவிலை. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் திருமணமானவர் என்று மனுதாரருக்கு தெரிந்திருக்கிறது. அப்படி இருந்தும் தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நம்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
குற்றம்சாட்டப்பட்டவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மனுதாரரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளிக்கவில்லை. மனுதாரர்தான், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வார் என்று நம்பிக்கொண்டு இருந்திருக்கிறார்.
கடந்த 31 ஆண்டுகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை அவ்வாறு செய்யவில்லை” என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் முதியவருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிக்க: இமாச்சலப் பிரதேசம்|காணமால் போன 50 பேர்.. மேகவெடிப்பு என்றால் என்ன? நிகழ்வது எப்படி?