போதையில் இருந்த மும்பை பெண் ஒருவர் பெங்களூருவிலுள்ள ஒரு பிரபல பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. என்ன மும்பையில் வசிக்கும் பெண்ணுக்கு பெங்களூருவில் இருந்து உணவு டெலிவரி செய்யப்பட்டதா! ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா! வாருங்கள் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவை பொருத்தவரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பது பிரியாணிதான். இதனை கடந்த ஆண்டு சொமேட்டோ தரவுகளும் உறுதிசெய்திருக்கிறது. மேலும் ஸ்விக்கியிலும் கடந்த 7 ஆண்டுகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளிலும் சிக்கன் பிரியாணியே முதலிடம் வகிக்கிறது. தோராயமாக ஒரு நிமிடத்தில் 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுவதாக கூறியுள்ளது ஸ்விக்கி. அப்படி அனைவராலும் விரும்பப்படும் பிரியாணியைத்தான் மும்பையைச் சேர்ந்த பெண்ணும் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் மும்பையில் இருந்துகொண்டு பெங்களூருவிலுள்ள பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்ததுதான் இங்கு சுவாரஸ்யம்.
மும்பையைச் சேர்ந்த சுபி என்ற பெண், குடிபோதையில் பெங்களூருவிலுள்ள மேக்னா ரெஸ்டாரண்ட்டில் சிக்கன் பிரியாணியை சொமேட்டோவில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், சொமேட்டோவும் இந்த ஆர்டரை ஏற்றுக்கொண்டதுதான் ஆச்சர்யமானது. சுபியும் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால் அதனுடைய பில்தான் ரூ.2500 எனப் போடப்பட்டுள்ளது. இதனை அந்த பெண் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”நான் போதையில் பெங்களூருவிலிருந்து ரூ.2500 மதிப்புள்ள பிரியாணியை ஆர்டர் செய்தேனா?” என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டபிறகு மறுநாள் மதியம் 3 மணி - மாலை 6 மணியளவில் உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 21,2023 அன்று இந்த சுபி இதனை பதிவிட்டுள்ளார். அதனை 487.7 பேர் பார்த்துள்ளனர். மேலும், ஏகப்பட்ட கமெண்டுகளும் இன்றுவரை குவிந்தவண்ணம் உள்ளன. சுபியின் பதிவுக்கு பிற பயனர்கள் மட்டுமல்ல; சொமேட்டோவும் கமெண்ட் செய்திருக்கிறது. ”சுபி, உங்கள் வீட்டுவாசலுக்கு உங்களுடைய ஆர்டர் வந்துசேர்ந்ததும் உங்கள் ஹேங்ஓவர் மகிழ்ச்சியானதாக இருந்திருக்கும். அந்த அனுபவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
சிலர் சொமேட்டோ எப்படி இந்த ஆர்டரை ஏற்றுக்கொண்டது என வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். எப்போது சொமேட்டோ நகரம் விட்டு நகரம் உணவு டெலிவரி செய்ய ஆரம்பித்தது எனவும் கேட்டுள்ளனர்.
உணவு ஆர்டர் செய்தது மட்டுமல்லாமல், டெலிவரி செய்யப்பட்ட பின் பிரியாணி, சாலன் ரெய்த்தா மற்றும் சிப்ஸ் ஆகியவற்றின் புகைப்படத்தையும் பகிர்ந்து, “சிறந்த முடிவு @zomato, எனது சம்பளம் எங்கே?" என்று கேட்டுள்ளார்.
இந்த போஸ்ட்டானது இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.