மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, தானே, ராய்கட் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது. இதனால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலைகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. பந்த்ரா, நவி மும்பை பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
அந்தேரியில் உள்ள சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல்வேறு விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத் தொகை முழுமையாக திருப்பி தரப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மகாராஷ்டிராவில் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது.